Saturday, November 5, 2011

கவிதை வேளைகள்


ழைய காகிதங்களை புரட்டிக் கொண்டிருக்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் தென்பட்டது. கவிதை என்ற தலைப்பிலான அந்த கவிதை:

அது ஒன்றும் எச்சில் அல்ல
நீ சொன்னவுடன்
துப்பி விடுவதற்கு.


வேளை: புகழ்பெற்ற கவிஞர் ஒருவரை பார்ப்பதற்கு நண்பருடன் சென்றிருந்தேன். இவரும் கவிதை எழுதுவார் என்று என்னை அறிமுகப்படுத்தினார் நண்பர். உடனே அவர் "எஙக ஒரு ரெண்டு வரி சொல்லுங்க..." என்றார். அவர் கேட்ட விதம் வீடு திரும்பும் வரை மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எழுதிய கவிதைதான் இது. பொங்கும் உணர்வுகள் கவிதையாய் புனல் கொள்கின்றன என்று சொல்லலாமா?

Sunday, October 2, 2011

யூதாஸ்களை காட்டிக் கொடுப்பவர்கள்

 

யூதாஸ்களை கயவர் என்றே
எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்;

ஆனால் சிலர் யூதாஸ்களை
வேறுபடுத்தியும் அறிகிறார்கள்;

மொஹஞ்சதாரோவைச் சேர்ந்த யூதாஸ் எனில்
கழுவில் ஏற்றத் துடிக்கிறார்கள்;

லோத்தல் யூதாஸ் என்றால்
அரசனாக்குவது தகும் என விவாதிக்கிறார்கள்;

கங்கைச் சமவெளித் தவளைகள்
சிந்துச் சமவெளி வாரிசுகளானால்
வேறு என்ன நடக்கும்?

அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் கொன்று குவிப்பதில்
வேறுபாடு காண கற்றுக் கொடுக்கும்.

 

கடைசி விருந்து அருந்தியவர்களால் மட்டுமே
யூதாஸ்களை காட்டிக் கொடுக்க முடிகிறது;

கசந்து போவதன் மூலமே
கடைசி விருந்து என்பது அறியப்படுவதாலும்;

முன்னம் பலமுறை கசக்காத
விருந்து அருந்தியவர்கள் என்பதாலும்;

வலப்புறமும், இடப்புறமும் திருடர்கள் சூழ
கதறுகிறார்கள், காட்டிக் கொடுத்தவர்கள்.

போருக்குத் தயாராகிறார்கள்,
அப்பாவிகளின் குருதிகளால்
அரசபாட்டை அமைக்கும் யூதாஸ்கள்

தேர்க்கால்களின் மீதேறி ஒருவன்;
சொர்க்கத்திற்கு போவதாகச் சொல்லும்
பொய்க்கால் குதிரை மீதேறி மற்றொருவன்.

 

Thursday, August 11, 2011

கல்(கு)வாரி


காய்த்துப் போயின கைகள்
கருங்கல் மலை தகர்க்கையில்
நித்தியச் சிறைகளாய்
ஆன்மாவை உள்வாங்கும் மலை முகடுகள்.

நீளப் பகல்களின் தொலைதல்
சாராய ஆற்றாமையில்
மிச்சமிருக்கும் ஆறுதலையும்
பிடுங்கித் தின்னும்.

காயங்களை கிழித்து அம்மணத்திற்கு
ஆடை தைக்கையில்
நிர்வாணப்படும் வாழ்க்கை.

அடுப்புகளும்
சிதைகளாகிப் போகும்
எருவட்டி தட்டி எரிக்கையில்.

முள்முடி சூட்டும்
கந்துக்காரனின் இலக்கணம் மீறிய வசவுகள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உயிர்த்தெழும் ஆவி
சிலுவையில் அறையப்படும்
விடியலில்!
.