Thursday, August 11, 2011

கல்(கு)வாரி


காய்த்துப் போயின கைகள்
கருங்கல் மலை தகர்க்கையில்
நித்தியச் சிறைகளாய்
ஆன்மாவை உள்வாங்கும் மலை முகடுகள்.

நீளப் பகல்களின் தொலைதல்
சாராய ஆற்றாமையில்
மிச்சமிருக்கும் ஆறுதலையும்
பிடுங்கித் தின்னும்.

காயங்களை கிழித்து அம்மணத்திற்கு
ஆடை தைக்கையில்
நிர்வாணப்படும் வாழ்க்கை.

அடுப்புகளும்
சிதைகளாகிப் போகும்
எருவட்டி தட்டி எரிக்கையில்.

முள்முடி சூட்டும்
கந்துக்காரனின் இலக்கணம் மீறிய வசவுகள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உயிர்த்தெழும் ஆவி
சிலுவையில் அறையப்படும்
விடியலில்!
.

No comments:

Post a Comment